மக்களுக்கு அடுத்த ஷாக்..!! இனி கடலை மிட்டாய் விலையும் ஏறும்! தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிர்ச்சி அறிவிப்பு!

 
1

கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாயில் 70 சதவீதம் வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் வளைகுடா போர் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலைமிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது.
அத்துடன் வெளிநாடு ஆர்டர்கள் ரத்து செய்து வருகின்றனர். இதனால், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம் அடைந்துள்ளன.அத்துடன் உற்பத்தி முடங்கும் சூழலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. 


இதுகுறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கூறும்போது, "மேற்காசிய போர் பதற்றம் காரணமாக கடலை மிட்டாய் ஏற்றுமதி 10 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கடலை மிட்டாய் தயாரிப்புக்கு 90 சதவீதம் விறகு அடுப்புகளே பயன்படுத்துவதால், வணிக கேஸ் சிலிண்டர் நிறுத்தத்தால் எந்த பிரச்சினையும் இல்லை.ஆனால், கடலை மிட்டாய் பாக்கெட் செய்யும் பிளாஸ்டிக் கவர், தாள், டப்பாக்களின் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால் தயாரிப்பு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலை மிட்டாய்கள் மீது கிலோவுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்புவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.