சாமானியர்கள் தலையில் விழுந்த அடுத்த இடி! இனி 'இந்த' பொருட்களின் விலையும் ஏறும்!

 
1

இந்தியா எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது, அதன் தாக்கம் இந்தியாவில் நேரடியாகப் பிரதிபலிக்கும். அது ஒருபுறம் இருந்தாலும், தற்போது மத்திய கிழக்கில் போர் அல்லது பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளையாக இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் தற்போது லாரிகளின் வாடகையையும் அதிகப்படுத்த உள்ள நிலையில், சாமானிய மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் பெரும்பாலும் லாரிகள் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் லாரி வாடகை அதிகரித்தால் அதன் தாக்கம் நேரடியாக பொதுமக்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கும். அதாவது, லாரி வாடகை உயர்ந்தால் பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகரிக்கும்.

இந்த கூடுதல் செலவை வியாபாரிகள் பொருட்களின் விலையில் சேர்த்துவிடுவது வழக்கம். இதன் காரணமாக, அரிசி, பருப்பு, காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இதனால், நடுத்தர வர்க்கத்தினரும் குறைந்த வருமானம் கொண்ட மக்களும் தங்களது வருமானத்தில் பெரும்பகுதியை அத்தியாவசிய செலவுகளுக்கே ஒதுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதுமட்டுமல்லாமல், விவசாயிகளும் விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல லாரிகளை தான் உபயோகிக்கின்றனர். வாடகை அதிகரித்தால் விவசாயிகளின் செலவுகளும் அதிகரிக்கும். சில நேரங்களில் போக்குவரத்து செலவை ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் குறைந்த லாபத்துடன் பொருட்களை விற்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

அதேபோல், மணல், சிமெண்டு, ஜல்லி, இரும்புக் கம்பிகள் போன்ற கட்டுமானப் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. லாரி வாடகை அதிகரித்தால் கட்டுமானச் செலவும் உயரும். தமிழ்நாட்டில் ஏற்கனவே கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, லாரி வாடகை அதிகரிப்பு பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல்வேறு பாதிக்க கூடியதாக இருக்கும்.

இருப்பினும், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் லாரி தொழிலைச் சார்ந்தே இருக்கின்றனர். டீசல், பெட்ரோல் விலை உயர்வு அனைவரது வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, லாரி உரிமையாளர்களின் நலனை பாதுகாக்க வேறு வழியின்றி லாரி வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுப்பட்டுள்ளனர். இவ்வாறு, பெட்ரோல் விலை, டீசல் விலை, கட்டுமானப் பொருட்கள் விலை, லாரி வாடகை, அத்தியாவசியப் பொருட்கள் விலை என அனைத்தும் ஒரே நேரத்தில் உயர்த்தப்படுவது சாமானிய மக்களை மட்டுமே பாதிக்கும் சூழல் எழுந்துள்ளது.