வந்தாச்சு புது ரூல்ஸ்..! இனி இந்த ரயில்நிலையங்களில் கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் போக முடியாது..!
பண்டிகை காலங்களில் பொதுவாக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும்...இந்நிலையில் கூட்ட நெரிசலைத் தடுக்கும் பொருட்டு, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோவை, எர்ணாகுளம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு (Waitlisted Ticket Holders) தடை விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் 600 பேர் அமரும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், எழும்பூரில் 100 சதுர மீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இடம் குறைவாக உள்ளது, ஆனால் பணிகள் முடிந்ததும் விரிவாக்கப்படும். கோவை மற்றும் எர்ணாகுளம் ஆகிய இடங்களிலும் இதேபோன்ற காத்திருப்புப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த இடங்கள், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பயணிகளுக்கான காத்திருப்பு மண்டலங்களாகச் செயல்படும். முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறைந்த ரயில் சேவைகள் மற்றும் அதிக தேவை காரணமாக, பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது. மாநிலத்திற்குள் அதிகப்படியான பயணம் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களின் வருகையே இதற்கு முக்கிய காரணம். இதை மனதில் வைத்தே பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்கும் பொருட்டு, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோவை, எர்ணாகுளம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு (Waitlisted Ticket Holders) தடை விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.


