அடையாளம் கூட தெரியாத நிலையில் கொடூரமாக பறிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உயிர் - தேசிய மகளிர் ஆணையம் வேதனை!

 
1

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 'நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை முழுமையாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்ளும் தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க வேண்டும்.

மேலும், பெண் உயிரிழந்த சம்பவத்தில் ஏதேனும் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் ரயில் நிலையம் மற்றும் ரயில் பெட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும்.

தேசிய மகளிர் ஆணையர் நோட்டீஸ்

தொடர்ந்து, வழக்கின் விசாரணைக்கு உதவும் தடயவியல் ஆதாரங்கள் எதுவும் அழிந்துவிடாமல் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை விரைந்து கண்டறிய வேண்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காலியாக நிறுத்தி வைக்கப்படும் ரயில் பெட்டிகளைக் கண்காணிப்பதற்கான நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும்.

இரவு நேரங்களில் ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் அருகே காவல்துறையினர் முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

பாதுகாப்புப் பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். ரயில் நிலையங்களில் பயணிகள் மட்டுமின்றி, இரவு நேரங்களில் ரயில் நிலைய வளாகத்தில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமைந்திருக்க வேண்டும்.

 

இந்த வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை, கைது நடவடிக்கை, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ரயில் நிலையப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய விரிவான நடவடிக்கை அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ரயில் நிலையங்கள், பொதுப் போக்குவரத்து வளாகங்களில் பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது. இதுபோன்ற கடுமையான சம்பவங்களில் உரிய பொறுப்புணர்வுடன் செயல்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விரைந்து நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் உறுதி செய்ய வேண்டும்” என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.