அதிர்ச்சியில் இசையுலகம்! ஆஸ்கர் விருது வென்ற பாடகர் விபத்தில் சிக்கி மரணம்..!
'ஒன்ஸ்' திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற புகழ்பெற்ற அயர்லாந்து பாடகரும் பாடலாசிரியருமான கிளென் ஹான்சார்ட் (56), டப்ளின் புறநகர் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். லூக்கன் பகுதியில் ஒற்றை வாகன மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய அவருக்குச் சம்பவ இடத்திலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், உயிர் பிரிந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது. இச்சம்பவம் உலகளவில் இசை ரசிகர்களிடையேயும் சக கலைஞர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டப்ளின் தெருக்களில் தெருப்பாடகராக தனது இசை பயணத்தை தொடங்கிய ஹான்சார்ட், 'தி ஃபிரேம்ஸ்' மற்றும் 'தி ஸ்வெல் சீசன்' ஆகிய இசைக்குழுக்கள் மூலம் புகழ்பெற்றார். 1991-ல் வெளியான 'தி கமிட்மென்ட்ஸ்' படத்தில் நடித்த இவர், 2007-ல் வெளியான 'ஒன்ஸ்' திரைப்படத்திற்காக தன் சக நடிகை மார்கெட்டா இர்க்லோவாவுடன் இணைந்து எழுதிய "ஃபாலிங் ஸ்லோலி" பாடலுக்காக 2008-ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதை வென்றார். மேலும், இவர்களது பாடல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'ஒன்ஸ்' பிராட்வே இசை நாடகம் 8 டோனி விருதுகளை வென்றதுடன், ஹான்சார்டின் "டிட்ன்ட் ஹி ராம்பிள்" ஆல்பம் கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
ஹான்சார்டின் மறைவுக்குப் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், அயர்லாந்து ஜனாதிபதி கேத்தரின் கொனோலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்களும் கலைஞர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். "ஒரு சிறந்த இசைக்கலைஞரையும், நல்ல நண்பரையும் இழந்துவிட்டேன்" எனப் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அத்துடன், அயர்லாந்தின் தலைசிறந்த பாடகரான ஹான்சார்ட், தன் வாழ்நாள் முழுவதும் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் வீடற்றோரின் நலனுக்காகவும் குரல்கொடுத்து வந்தவர் என்றும் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இசையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த கிளென் ஹான்சார்ட், 2023-ல் ஷேன் மெக்கௌவனின் இறுதி சடங்கில் 'ஃபேரிடேல் ஆஃப் நியூயார்க்' பாடலை எழுச்சியூட்டும் வகையில் பாடி ஒட்டுமொத்த கூட்டத்தையும் மெய்சிலிர்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஹான்சார்டுக்கு அவரது மனைவியும் பின்லாந்து கவிஞருமான மைரே சாரிட்சா மற்றும் 3 வயது மகன் கிறிஸ்டி ஆகியோர் உள்ளனர்.

