மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

 
suicide

பட்டுக்கோட்டையில் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 suicide

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் சாலையில் பாரதி சாலை வடக்கு எஸ்.எம்.எஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது 45). இவரது மனைவி காளீஸ்வரி (வயது 35). இவர்களுக்கு நிவ்யதர்ஷினி ( வயது 10) என்ற ஒரு மகள் உள்ளார். இவர் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று வெகுநேரமாகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால் அருகிலிருக்கும் குடியிருப்புவாசிகள் பதற்றமடைந்து இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உடல்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காளீஸ்வரியின் கணவருக்கு தகவல் தெரியப்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ராமநாதன் பட்டுக்கோட்டையில்  டீக்கடை வைத்திருந்து நஷ்மடைந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராமநாதனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டதாகவும், இந்த கடன் பிரச்சனையால் சென்னைக்கு சென்று டீக்கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேற்படி கடன் பிரச்சனை காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவரது கணவர் தொழில் நிமித்தமாக சென்னை சென்றபிறகு நேற்று  இரவு காளீஸ்வரி தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்? என்று தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்பே முழுமையான விபரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.  மகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.