மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்..!!
மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொட்டிய கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பஸ் போக்குவரத்து மட்டுமின்றி, புறநகர் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பையில் மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்பதால், அவசியமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.மும்பை, தானே, பால்கர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மும்பை பல்கலைக்கழகம் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது, புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றான கர்ஜத்-லோனாவாலா போர் காட் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, மும்பை-புனே ரயில் வழித்தடத்தில் இன்று அதிகாலையில் ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன. இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மும்பை-புனே மலைப்பாதைப் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மற்றும் ரயில் தண்டவாளங்களில் பாறைகள் விழுந்தது தொடர்பான சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ரயில் சேவைகளையும் விரைவாகச் சீரமைப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகளை ஒரே அணியாக இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
மும்பை, பால்கர், ராய்கட் மற்றும் தானே ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

