“மாம்பழம் சின்னம் அன்புமணிக்குதான்”- நீதிமன்றம் அதிரடி
மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கு முடிவுக்கு வரும்வரை மாம்பழம் சின்னத்தை முடக்கிவைக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில், சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை; மாறாக தேர்தலில் மாம்பழம் சின்னத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கவே சின்னத்தை முடக்க வேண்டும் என்று உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தோம்; சின்னத்தை முடக்கும் பட்சத்தில் இரு தரப்பினரும் பொது சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதால் சின்னத்தை முடக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், ஏற்கனவே வேட்புமனு பரிசீலனை முடிந்து, வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது என குறிப்பிடப்பட்டது.அன்புமணி தரப்பில், சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகும்படி ராமதாஸ் தரப்புக்கு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு மாறாக சின்னத்தை முடக்கக் கோரி தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.வழக்கில் வாதங்கள் முடிவடையாத நிலையில், விசாரணையை நீதிபதி நாளை தள்ளிவைத்த நிலையில், அதுவரை சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என உத்தரவிட மறுத்த நீதிபதி தமிழ்ச்செல்வி விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார்.



