கோயம்பேட்டில் புகைப் பிடித்துவிட்டு ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் கைது!

 
ad

கோயம்பேடு மார்கெட்டு பின்புறம் உள்ள "ஏ" சாலையில் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமான கட்டண வாகன நிறுத்தும் இடம் உள்ளது.

இங்கு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ்சில் இருந்து நேற்று மாலை திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக அருகில் நிறுத்தியிருந்த   2 ஆட்டோக்கள் மீதும் தீ பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு தீயனைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் ஆம்னி பஸ் மற்றும் 2 ஆட்டோகளும் முழுவதும் எரிந்து நாசமானது.


தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிவதற்கு முன்பு மர்ம வாலிபர் ஒருவர் பஸ்சில் இறங்கி வருவது பதிவாகி இருந்தது. கோயம்பேடு மார்கெட்டில் பதுங்கி இருந்த அவரை சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனி முத்து (வயது45) என்பது தெரிந்தது. கோயம்பேடு மார்கெட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வரும் அவர் பஸ்சில் அமர்ந்து பீடி பிடித்துவிட்டு பின்னர் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.