தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு முக்கிய பொறுப்பு.. யார் இந்த குரு தலைவா..??

 
W

திமுக ஆட்சியில் செயல்பட்ட உண்மைச் சரிபார்ப்புக் குழுவின் திட்ட இயக்குநராக யூடர்ன் இணையதளத்தின் ஆசிரியராக இருந்த ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மாத ஊதியம் ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு அலுவல் பயன்பாட்டுக்கான தனி வாகனமும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேள்ள தவெக அரசு, இந்த அமைப்பின் பெயரை மாற்றியதுடன், திட்ட இயக்குநருக்கான ஊதியத்தையும் குறைத்தும், அலுவல் வாகன வசதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் உண்மை சரிபார்ப்பு குழுவின் பணியாளர்களின் எண்ணிக்கை 60-இலிருந்து 14 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த உண்மைச் சரிபார்ப்புக் குழு, இனி தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு என்ற பெயரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பின் தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப் பிரிவு தலைவரும், ஆன்லைன் தளபதி ஃபேன்ஸ் கிளப் நிறுவனருமான குரு தலைவா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பிரசன்னா, மக்கள் தொடர்பு அலுவலராக சுஜிதா நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சிறப்பு அலுவலராக, தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள், போலியான மற்றும் சித்தரிக்கப்பட்ட தகவல்களைக் கண்டறிந்து, அதிகாரப்பூர்வ தகவல்களுடன் ஒப்பிட்டு உண்மை நிலையை வெளியிடுவது, தவறான தகவல்களால் ஏற்படக்கூடிய தேவையற்ற பதற்றங்களைத் தடுப்பது ஆகியவை இந்தப் பிரிவின் முக்கியப் பணிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.