இடது பக்கம் தூங்குவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்..!

 
1


செரிமானம்: நாம் உணவு உட்கொண்ட பிறகு, இடது பக்கமாக தூங்கும்போது, உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது. நமது வயிறும், குடலும் இடது பக்கத்தில் அமைந்துள்ளன. இடது பக்கமாக தூங்கும்போது, உணவு இயற்கையாகவே ஈர்ப்பு விசையின் உதவியுடன் குடலில் எளிதாக செல்ல உதவுகிறது. இதனால் செரிமான பிரச்சனைகள் குறைந்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.

கழிவுகளை அகற்றும் நடைமுறையும் சுலபமாக நடக்கும். செரிமானம் ஆகாத உணவுகள் மற்றும் நச்சுகள் சிறுகுடலில் இருந்து பெருங்குடலுக்கு நகர்ந்து காலையில் மலமாக வெளியேற்றப்படுகின்றன. இரவில் இடதுபக்கத்தில் தூங்குவது இந்த நடைமுறையை எளிதாக்கும்.

இதய ஆரோக்கியம்: இடது பக்கத்தில் இதயம் இருப்பதால் இடது பக்கமாக தூங்குவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஈர்ப்பு விசையால் இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறும். இது இதயத்திற்கு சுமையை குறைத்து உடல் நன்றாக ஓய்வெடுக்க உதவும்.

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிப் பெண்கள் இடது புறமாக ஒருக்களித்து தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன் மூலம் கருப்பை மற்றும் கருவுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு நஞ்சுக்கொடிக்கு போதுமான ஊட்டச் சத்துகளை வழங்கவும் உதவும். இடதுபுறமாக தூங்கும்போது முழங்கால்களை சற்று வளைத்து கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக்கொள்ளலாம்.

குறட்டையை தடுக்கும்: இடதுபுறமாக திரும்பி தூங்குவது குறட்டையை நிறுத்துவதற்கும் உதவும். அப்படி தூங்குவது நாக்கையும் தொண்டையையும் நடுநிலையான நிலையில் வைத்திருக்கவும் உதவும். அதனால் சுவாசம் சீராக நடைபெறும். சுவாசப்பாதைகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாது.

தூக்கத்தை மேம்படுத்தும் வழிகள்: தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லவும், ஒரே நேரத்தில் எழுந்திருக்கவும். படுக்கையறை அமைதியாகவும், இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும். தூங்குவதற்கு முன் காபி, டீ போன்ற பானங்களை அருந்த வேண்டாம். உடற்பயிற்சி செய்வது தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யவும்.

தூக்கம் நமது உடல் மற்றும் மன நலத்திற்கு மிகவும் அவசியம். எனவே, ஒவ்வொரு நாளும் போதுமான மற்றும் தரமான தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.