"தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது" - சு.வெங்கடேசன் எம்.பி.,

 
mp

மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடி. இராமேஸ்வரத்திலிருந்து மங்களூர். மதுரை வழியாக இரு புதிய ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்ற ரயில்வே வாரியத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கும் , ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கும் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைத்ததுள்ளதாக எனது கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.   தென்மாவட்ட மக்களுக்கும் , மேற்கு மாவட்ட மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய இந்த ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். 

su venkatesan

அதன் விளைவாக தற்போது தெற்கு ரயில்வே பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி ஒரு இரவு நேர ரயில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கும் , மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் வாரம் இரு முறை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதைப்போல ராமேஸ்வரத்திற்கும் மங்களூருக்கும் இடையே வாரம் ஒரு முறை ரயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது மதுரை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் மிக முக்கியமானது. கோவை ரயில் பயணிகள் சங்கமும் , மதுரை தூத்துக்குடி பகுதி மக்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு இக்கோரிக்கையை பலமுறை வைத்திருந்தனர்.  இந்நிலையில் இந்த இரு ரயில்களுக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, விரைவில் அவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொடுத்த ரயில்வே வாரியத்திற்கும், பரிந்துரை செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.