உயிர் காக்கும் "Air Bag"... 7 வயது சிறுவனின் உயிரை குடித்த சோகம்..!
திருப்போரூர் அருகே 7 வயது சிறுவன் கார் விபத்தில் கார் ஏர் பேக் ஓபன் ஆகி குழந்தை கவின் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஆலத்தூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே இரவு பையனூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் பையனூரில் இருந்து திருப்போரூர் நோக்கி Breeza car -ல் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலது புறம் திரும்பியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பின்புறமாக வந்த பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட கார் பயங்கரமாக மோதியுள்ளது.
அந்த வாடகை காரை விக்னேஷ் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.இந்த வாடகை காரில் கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தன் மற்றும் அவரது 7 வயது மகன் கவின் உள்பட ஐந்து பேர் அந்த வாடகை காரில் பயணம் செய்துள்ளனர்.இதில் கவின் முன்பக்கத்தில் அமர்ந்து கொண்டு வந்துள்ளார்.பின் பக்கத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டபோது ஏர்பேக் ஓபன் ஆகி கவின் முகத்தில் வேகமாக அடித்ததில் காயம் ஏற்பட்டது.உடனே அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த கவினை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவினை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


