சிறுமியை பாய்ந்து தாக்கி கொன்ற சிறுத்தை! வால்பாறையில் அதிர்ச்சி
வால்பாறை அருகே தாயுடன் விளையாடிய சிறுமி சிறுத்தை வேட்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறையை அடுத்து உள்ளது ஊசிமலை மட்டம் எஸ்டேட். தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வரும் அய்னுல் அன்சாரி மற்றும் நசீரான் ஆகியோரது மகள் அப்சார் (4). நேற்று அப்பகுதியில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. எனவே நசீரான் அவரது மகள் அப்சார் (4) ஆகியோர் உள்ளிட்ட பலர் அப்பகுதியில் சிற்றோடை பகுதியில் உள்ள கீரை பறிக்க சென்று உள்ளனர். இன்னிலையில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை தேயிலை தோட்ட பகுதியில் வலம் வந்துள்ளது.
இந்நிலையில் சற்று தொலைவில் இருந்த அப்சாரை சிறுத்தை கழுத்தில் கடித்து தூக்கி செல்வதை கண்ட தாய் மற்றும் அவருடன் சென்றவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். இந்நிலையில் விபரீதம் நடந்துள்ளதாக கருத்திய துக்கவீட்டில் இருந்த தொழிலாளர்கள் சம்பவத்தை அறிந்து தேயிலைத்தோட்டத்திற்குள் சிறுமியை மீட்க 50க்கும் மேற்பட்டோர் சால்கள் (நடைபாதை) தோறும் கூச்சலிட்டு தேடி சென்றனர். மக்கள் வருவதை அறிந்த சிறுத்தை சிற்றோடை புதருக்குள் சிறுமியின் உடலை விட்டுவிட்டு ஓடிவிட்டது. தேடிச்சென்ற எஸ்டேட் மக்கள் சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் புதரில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து எஸ்டேட் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வால்பாறை வனத்துறை, போலீசார், வருவாய் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுமி உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதை உறுதி செய்தனர். குழந்தையின் உடல் உடற்கூறாய்விற்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தால் எஸ்டேட் பகுதியில் பீதி நிலவுகிறது. போதிய விழிப்புணர்வுகளை எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களின் தாய் மொழியில் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.