இன்று நடைபெறவிருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழா திடீர் ரத்து..!
தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதும், பெண்கள் பாதுகாப்புக்கு என தமிழகத்தில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான கோப்புகளில் பதவியேற்ற அன்றைய தினமே கையொப்பமிட்டார்.இந்த அதிரடிப்படைக்கு மற்ற காவல்துறையினரிடமிருந்து தனித்துவமாக தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னத்தில் தைரியம், வேகம் மற்றும் அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கவும், மாநிலம் முழுவதும் தொடர் கண்காணிப்பு மற்றும் விரைவான மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி திட்டம், தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற்றும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
தவெக அரசால் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இன்று (மே.29) தொடங்கி வைக்க இருந்தார்.
இந்நிலையில் இன்று நடக்கவிருந்த தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

