"லேப்டாப் திட்டம் ஒரு ஏமாற்று நாடகம்!" - திமுக அரசைச் சாடிய வானதி சீனிவாசன்..!

 
1 1

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இலவச லேப்டாப் திட்டம், தமிழ்நாட்டின் உயர் கல்வியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கு ஜெயலலிதாவின் லேப்டாப் திட்டம் முக்கிய காரணம்.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்கவில்லை. ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இப்போது புதிதாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்குவது போல், மீண்டும் ஒரு ஏமாற்று நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் மோசடித்தனத்தை, நாடகத்தை மாணவர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கறிவார்கள்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனவே, தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, நீதிக்கு கிடைத்த வெற்றி. சிறுபான்மையினரின் வாக்குகளை அறுவடை செய்ய, இந்துக்களின் மத நம்பிக்கைகள், உணர்வுகளை கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.