’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கவில்லை - தமிழக அரசு தகவல்

 
the Kerala Story the Kerala Story

’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கவில்லை எனவும், படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு உரிமையாளர்களே திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாகவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கேரளா ஸ்டோரி”.கேரளாவைச் சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த  32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று  காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது.  இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. இதேபோல் மேற்கு வங்கம் மாநிலத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த திரைப்படத்திற்கு தடை இதிக்கவில்லை என்றும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு எதிராக போராடியவர்களின் மீது சென்னை மற்றும் கோவையில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு உரிமையாளர்களே திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால், அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.