தமிழ்நாட்டிலேயே உச்சம்... கரூரில் களம் காணும் 79 வேட்பாளர்கள்

 
s

தமிழகத்திலேயே அதிக பட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் 79 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் நான்கு முனை போட்டியாக தேர்தல் களம் உள்ளது.இதில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட மொத்தம் 33 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் இன்று 3 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதன் மூலம் இத்தொகுதியில் 30 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 83 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இறுதி நாளில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகி, மனுக்களைத் திரும்பப் பெற்றனர். தற்போது இத்தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். 

கிருஷ்ணராயபுரத்தில் மொத்தம் 28 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இத்தொகுதியில் எவரும் மனுவைத் திரும்பப் பெறாததால், தாக்கல் செய்த 28 வேட்பாளர்களுமே இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.குளித்தலை தொகுதியில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 2 வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அதன்படி, குளித்தலையில் 29 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலில் உள்ளனர்.குறிப்பாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.