அடகு வைக்கும் போது 45.8 கிராம் இருந்த நகை மீட்கும் போது 43.8 கிராமாக மாறிய மாயம்! பாதிக்கப்பட்டவர் தர்ணா
கடலூரில் வங்கியில் நகை அடகு வைத்த போது இருந்தது 45.8 கிராம், நகை மீண்டும் வாங்கும் போது இருந்தது 43.8 கிராம், 2 கிராம் நகை எங்கே என கேட்டு வங்கியை மூடவிடாமல் இரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் தனியார் நிறுவன தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தனது மனைவி ராதிகா பெயரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் 45.8 கிராம் நகையை அடகு வைத்து 2 லட்சத்து 2000 ரூபாய் நகை கடன் பெற்றுள்ளார். மாதா மாதம் அதற்கான தவணைத் தொகையை செலுத்தி வந்த நிலையில் இன்று அந்த நகை கடனை அடைத்து நகையை பெற்றுக் கொள்ள வங்கிக்கு வந்துள்ளார். வங்கி கூறிய தொகையை கட்டி முடித்த பிறகு அவரிடம் நகையை ஒப்படைப்பதற்காக வங்கி அதிகாரிகள் நகையை எடை போட்டு பார்த்த போது 43.8 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இரண்டு கிராம் நகை எங்கே என்று கேட்டபோது மீண்டும் மீண்டும் அந்த நகையை அதிகாரிகள் எடை போட்டு பார்த்துள்ளார்கள் ஆனால் அவர்களுக்கு நகை கடன் கொடுக்கும் போது அவர்கள் வழங்கிய ரசீதிலும் 45.8 கிராம் என்று உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வங்கியில் நடைபெற்ற தணிக்கையின் போதும் அந்த நகை 45.8 கிராம் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தற்போது 43.8 கிராம் மட்டுமே உள்ள நிலையில் இரண்டு கிராம் நகை எங்கே என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் வங்கி அதிகாரிகள் சரியான பதில் சொல்லாததால் வங்கியை இரவு அடைக்க விடமாட்டேன் எனக்கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் வங்கி அதிகாரிகள் ஒரு நாள் கால அவகாசம் கேட்டுள்ளார்கள். ஒருநாள் கால அவகாசத்தில் நகை பற்றிய முழு விவரத்தை தெரிவிப்பதாக தெரிவித்தனர். நகையை திருப்பித் தரவில்லை என்பதை வங்கி அதிகாரிகளிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக வாங்கிவிட்டு பிரபு சென்றார். இரவு நேரத்தில் வங்கியை அடைக்க விடாமல் வாலிபர் ஒருவர் மேற்கொண்ட தர்ணா போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



