வீட்டை அடையும் முன் நடந்த கொடூரம்... எலக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்து 3 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

 
1

சொந்த ஊரை அடைவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், எலக்ட்ரிக் கார் ஒன்று வீதியின் ஓரத்திலிருந்த தடுப்புச்சுவரில் மோதி, அதன் மீது ஏறி தீப்பிடித்து எரிந்த கொடூர விபத்தில் 3 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம், விஜயவாடா மேற்கு பைபாஸ் சாலையில் திங்கள்கிழமை இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காரின் மோதல் வேகம் மிகக் கடுமையாக இருந்ததால், காரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் சாலையில் சிதறிக் கிடந்த காட்சியும், முற்றிலும் எரிந்து சாம்பலான காரின் இடிபாடுகளும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

குண்டூர் மாவட்டம் நம்பூரில் நடைபெற்ற சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியபோதே இக்கோர விபத்து நடந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் நுன்னா பத்மசாலி பஜாரைச் சேர்ந்த கொம்மரெட்டி ராம்தேவ் ரெட்டி (39), அவரது தாயார் கொம்மரெட்டி அருணா (56), ராம்தேவ் ரெட்டியின் 3 வயது மகன் மற்றும் திகுரு விஜயா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த ராம்தேவ் ரெட்டி நுன்னாவில் மதுபானக் கடைகள் நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹைதராபாத் மெஹ்திபட்னத்தைச் சேர்ந்த தியாகுரா அருணா (48) கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில், மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து மற்றும் கார் தீப்பற்றி எரிந்ததற்கான துல்லியமான காரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆந்திரக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த பெண்ணுக்குத் தேவையான அனைத்து உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.