’இதெல்லாம் நியாயமா?’ கொட்டும் மழையில் தார் சாலை அமைத்த நெடுஞ்சாலைத்துறை
திருத்தணியில் கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான திருவாலங்காடு, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, கே ஜி கண்டிகை, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் அறை மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருத்தணி நகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திருத்தணி நகராட்சிக்கு பெற்ற மாபோசி சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் காரில் செல்பவர்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திருத்தணியில் கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். எத்தனை நாட்கள் தாங்கும் என நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலையானது தேங்கி நிற்கும் மழைநீரை பொருட்படுத்தாது, தண்ணீரிலேயே போடப்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் யாரும் இல்லாமல், சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.