ஏர்போர்ட் மூர்த்தி மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து
புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்' மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து பதிவு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரில், ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவில் ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை செப்டம்பர் 7 ம் தேதி கைது செய்தனர்.பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்தனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி ஜெய்குமாரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார்ர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.பார்த்திபன் மற்றும் சங்கர்,ரூபன் ஆகியோர் ஆஜராகி, இயந்தரதனமாக வழக்கு தொடரப்பட்டதாகவும்,முழு கவனத்தை செலுத்தவில்லை என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.


