நீதிபதியிடமே மோசடி செய்த பலே கும்பல்..! CBI அதிகாரிகளாக நடித்து ரூ.2.50 கோடி மோசடி..!
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரி. ஜூலை 28ல் அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து இவருக்கு, 'வாட்ஸாப்' வீடியோ அழைப்பு வந்தது.
அதில், போலீஸ் சீருடையில் இருந்த நபர் ஒருவர், தன்னை மும்பையைச் சேர்ந்த சி.பி.ஐ., அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். கண்பத் சிங் வங்கி கணக்கு மூலம் 50 கோடி ரூபாய் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக கைது செய்ய உள்ளதாகவும் எச்சரித்தார். இது தொடர்பாக குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டினார்.
அதன் பின் மற்றொரு நபர், 'வாட்ஸாப்' வாயிலாக பண்டாரியை தொடர்பு கொண்டு, தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். ஹவாலா பணம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், பண்டாரியின் நிதி முதலீடுகள் குறித்த விபரங்களை கேட்டுள்ளார்.மிரட்டலுக்கு பயந்த பண்டாரி, தன் மியூச்சுவல் பண்ட் நிதி முதலீடுகள் மற்றும் பிற நிதி ஆவணங்கள் குறித்த விபரங்களை அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.விசாரணைக்கு உதவுவதாக கூறி, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றும்படி மோசடி கும்பல் பண்டாரியிடம் தெரிவித்துள்ளது.அதை நம்பி கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை, தன் எஸ்.பி.ஐ., வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடியே 50 லட்சத்து 51 ஆயிரத்தை, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பண்டாரி மாற்றியுள்ளார்.
அதன் பின் பி.பி.எப்., கணக்கில் உள்ள பணத்தையும் மாற்றும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.பி.ஐ., ஜோஹரி பஜார் கிளைக்கு பண்டாரி சென்றுள்ளார்.அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர், விபரம் அறிந்து பணத்தை மாற்றுவதை தடுத்து நிறுத்தினார்.இதையடுத்து, பண்டாரி தன் உறவினர் ரவீந்திர சிங்கை தொடர்பு கொண்டுள்ளார். அவர் ஜெய்ப்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

