இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது முதல் அமைச்சரவை கூட்டம்..! முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றது. தொடர்ந்து மே 21 ஆம் தேதி 23 அமைச்சர்களும், மே 22 ஆம் தேதி இரு அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தலின் போது தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், குறுவிவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன.
மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்த வேண்டியுள்ளது. இவை குறித்தும் மேலும், தாக்கல் செய்ய வேண்டிய முழு பட்ஜெட் பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மகளிருக்கு மாதம் ரூ.2500 திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக அரசு பொறுப்பேற்றது முதல் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக எப்போது உயர்த்தப்படும் என்பது தான் பெண்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என முதலமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

