தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று தாக்கல்..! மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?
நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆக.5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் நாளை (ஆக.6) தாக்கல் செய்ய உள்ளார்.அதன்படி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.
எத்தனை நாள் நடைபெறும்?
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்பட முக்கிய முடிவுகள், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதங்கள் 10-ந் தேதி தொடங்கும். அதன் நிறைவில் நிதி அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதன் பின்னர் இடைவெளி இல்லாமல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் தாக்கலாகி, விவாதத்துக்கு விடப்படும் என்றும், எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 2-ம் வாரம் வரை நீடிக்கலாம் என்றும் தெரிகிறது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, பால் கொள்முதல் அதிகரிப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வலியுறுத்துதல் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இதுதவிர, ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியில்லா கடனுதவி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை, மாணவர்கள் உயர் கல்விக்கு பிணையின்றி ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

