"வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 
masu

வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

corona patient

தமிழகத்தில் கொரோனா  மற்றும் ஒமிக்ரான் இரண்டும் ஒன்று சேர்ந்து மூன்றாம் அலையாக பரவி வருகிறது. தமிழகத்தில்  தினசரி கொரோனா பாதிப்பு 8ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 8,981 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27லட்சத்து 76 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது.  இருப்பினும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் 200 வார்டுகளில் 1600 முகாம்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

minister ma subramanian

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "எவரெஸ்ட் சிகரம் போல கொரோனா பரவுவதால் மக்கள்  விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இல்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார். 33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி இருந்தது . அதில் 21 லட்சம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் டோஸ் 92% செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 71சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள்"  என்றார்.