'படையப்பா' ரீரிலீஸ் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!
நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், மறு வெளியீட்டிலும் 25 நாட்களைக் கடந்து வெற்றி பெற்ற நிலையில், படக்குழுவினர் ஒன்றிணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது படையப்பா திரைப்படம். இதற்கு ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ரஜினிகாந்துடன் சௌந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்தார். வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் செந்தில், நாசர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரை பயணத்தை கொண்டாடும் விதமாக கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் 4k தரத்தில் இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பால் மீண்டும் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் 25 ஆவது நாளை கொண்டாடும் விதமாக படத்தின் நாயகன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒன்றிணைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.


