சிறுவனை மது குடிக்க வைத்து ஸ்டேட்டஸ் வைத்த சித்தப்பா!

 
s

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுவனை மது குடிக்க வைத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடித்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்திரவிட்டார். அதன்பேரில் திருச்சி மாவட்ட சைபர் ஃக்ரைம் போலீசார் விசாரணை நடத்தியபோது திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூரை சேர்ந்த மாணிக்கம் மகன் அஜீத்குமார் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் சிறுவன் மது அருந்தும் வீடியோவை பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அஜீத்குமாரை காணக்கிளியநல்லூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் அஜீத்குமாரின் சகோதரர் பிரசாத் என்பவர் பொங்கல் தினத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தபோது அவரது மகனுக்கும் மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து அஜீத்குமாருக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதனையடுத்து அஜீத்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.