வேளாங்கண்ணி ரூம் போட்ட காதல் ஜோடி- காதலனை வெட்டிவிட்டு காதலியை தூக்கி சென்ற குடும்பத்தினர்
பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு வந்து நேற்று திருமணம் முடித்து தனியார் விடுதியில் தங்கி இருந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் விடுதிக்குள் புகுந்து காதலன் குடும்பத்தாரை கத்தியால் வெட்டி தாக்கிவிட்டு பெண்ணை தூக்கி சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

பெங்களூர் நாகவாரா பகுதியை சேர்ந்தவர் டேனியல் இவரது மகன் ராகுல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா ராவ் மகள் கீர்த்தனா. ராகுலும் கீர்த்தனாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ராகுல் கிருஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ராகுலும், கீர்த்தனாவும் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி கோவாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பெண்ணை காணவில்லை என கீர்த்தனாவின் தந்தை ராஜா ராவ் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராகுல் கீர்த்தனாவுடன் கோவாவில் இருப்பதை அறிந்த ராகுலின் குடும்பத்தினர் அங்கு சென்று ராகுலையும், கீர்த்தனாவையும் வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்துள்ளனர். ராகுலின் தந்தை , தாய், சகோதரி, மாமா, மைத்துனர் என 8 பேர் வேளாங்கண்ணிக்கு வந்து ராகுலுக்கும், கீர்த்தனாவுக்கும் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை பேராலய வளாகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கீர்த்தனா தான் வேளாங்கண்ணியில் இருப்பதாகவும், ராகுலுக்கும் தனக்கும் திருமணம் முடிந்து விட்டது எனவும் தனது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கீர்த்தனாவை தேடி வந்த உறவினர்கள் உடனடியாக வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மேலும் கீர்த்தனாவின் பெற்றோர்கள் திருமணம் முடிந்துவிட்டது. இனி உங்களை பிரிக்க மாட்டோம் நீங்கள் அங்கேயே இருங்கள் நாங்கள் வந்து பெங்களூருக்கு அழைத்து செல்கிறோம் என கூறியதை நம்பி அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். இதனையடுத்து வேளாங்கண்ணிக்கு இன்று வந்த கீர்த்தனாவின் உறவினர்கள் 15 க்கும் மேற்பட்டோர் திடிரென ராகுல் தங்கியிருந்த விடுதி அறைக்குள் புகுந்து கீர்த்தனாவை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றுள்ளனர். இதனை தடுத்த காதலன் ராகுல் குடும்பத்தினரை கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் ராகுல், அவரது தந்தை டேனியல், தாய் கலையரசி, மாமா பிரகாஷ் ஆகியோருக்கு தலை, கை, முதுகு, கால் என சராமரியாக வெட்டு விழுந்துள்ளது. இதனிடைய கீர்த்தனாவை அவரது உறவினர்கள் அடித்து இழுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். வெட்டுக்காயங்களுடன் கிடந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து வந்த வேளாங்கண்ணி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். பெங்களூரை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் வேளாங்கண்ணிக்கு வந்து காதலன் குடும்பத்தாரை கத்தியால் வெட்டி விட்டு பெண்ணை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது.


