ஊரைவிட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி தற்கொலை! நிற்கதியில் நிற்கும் 4 குடும்பங்கள்
அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்த திருமணம் ஆன ஆண், பெண் இருவரும் தங்களுக்குள் கொண்ட தகாத உறவால் ஊரை விட்டு ஓடியவர்கள், மீண்டும் ஊருக்குள் வந்து காட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்தவர் விஜய் (35). தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று சிறுகடம்பூரை சொந்த ஊராக கொண்டு, சின்னமனக்குடியை ஒட்டியுள்ள நுரையூர் கிராமத்தில் திருமணம் ஆகி வந்தவர் தேவி (35). இவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய்க்கும் தேவிக்கும் காதல் மலர்ந்து தகாத உறவு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது உறவினர்கள் மற்றும் ஊராருக்கு தெரிய வந்தவுடன், இருவரையும் கூப்பிட்டு கண்டித்துள்ளனர். இதனால் விஜய், தேவி ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊரை விட்டு ஓடி விட்டனர். இரு குடும்பத்தினரும் தேடி கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விஜய்யையும் தேவியையும் தனித்தனியாக பிரித்து, அவரவர்கள் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதன் பின்னர் மீண்டும் எட்டு மாதத்திற்கு முன்னர் விஜய்யும், தேவியும், மீண்டும் தங்கள் குடும்பத்தை துறந்து விட்டு, ஓடி விட்டனர்.
இந்நிலையில் இன்று சின்னமனக்குடியை ஒட்டி உள்ள கள்ளக்காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள் அங்குள்ள மரத்தில் ஆண் பெண் என இருவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சில தினங்களுக்கு முன்பே தூக்கு மாட்டி இருந்திருக்கலாம் என்றும், உடல்கள் உருமாறிய நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. அருகில் கிடந்த உடைமைகளையும், இறந்த ஆணின் சடலத்தின் பையில் இருந்த அடையாள அட்டைகளையும் போலீசார் சோதனை செய்ததில், ஆணின் உடல் விஜய் என்பதும் பெண்ணின் உடல் தேவி என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஊரை விட்டு ஓடிய இவர்கள் இருவரும், மீண்டும் ஊருக்குள் வந்து கடலைக் காட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகாத உறவால் தங்களது இரு குடும்பத்தினரையும் தவிக்க விட்டு விட்டு சென்ற ஜோடிகள் இருவரும், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


