போகி அன்று வீட்டை கொளுத்திய போதை ஆசாமி... என்ன நடந்தது?
ஈரோட்டில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன், தனது வீட்டை தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் செந்தில் மற்றும் சுதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் செந்தில் மனைவி சுதாவிடம் அவ்வப்போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுடன் வாழ பிடிக்காத சுதா பிரிந்து செல்வதாக கூறி வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுனராக உள்ள செந்தில் இன்று வேலைக்கு செல்லாமல் காலையிலேயே மீண்டும் வீட்டில் மனைவி சுதாவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு ஒரு கட்டத்தில் முற்றியதில் சுதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த செந்தில் வீட்டை தீவைத்து கொளுத்தி உள்ளார். வீட்டின் படுக்கையறையில் பற்றிய தீ பரவி வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்தவுடன் அந்த பகுதி கரும்புகை சூழ்ந்து காட்சியளித்தது. அப்பகுதியினர் உடனடியாக இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த இரண்டு எரிவாயு சிலிண்டர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வெளியே எடுத்து வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குடும்ப பிரச்சனையின் காரணமாக கணவனே மது போதையில் சொந்த வீட்டை தீவைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


