டிரைவர் கண் அயர்ந்ததால் அசம்பாவிதம்! காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் தலைகீழாக விழுந்த கார்!
கேரள கோட்டயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேகமாக வந்த கார் ஒன்று வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தகர்த்துக்கொண்டு தோட்டத்திற்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
கோட்டயம் மாவட்டம் பாலா-தொடுபுழா சாலையில் உள்ள ஐன்கொம்பு (Ainkombu) பகுதியில் மாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசாகக் கண் அயர்ந்ததே (தூங்கியதே) இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இவ்விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிவேகமாக வந்த சிவப்பு நிற எஸ்.யு.வி (SUV) கார் ஒன்று, வீட்டின் எல்லைச் சுவரில் பலமாக மோதி, காற்றில் பறந்தபடி சுழன்று தோட்டத்திற்குள் தலைகீழாகப் பாய்ந்து கவிழ்கிறது. மோதிய வேகத்தில் காரில் இருந்த பொருட்கள் மற்றும் சுவரின் இடிபாடுகள் காம்பவுண்ட் முழுவதும் சிதறின.
காரில் பயணித்தவர்கள் முதலகோடம் (Muthalakodam) பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் கோட்டயத்தில் உள்ள மலரிக்கல் (Malarikkal) பகுதிக்கு சென்றுவிட்டுத் திரும்பியபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை.
விபத்து நடந்த சத்தம் கேட்டவுடன், வீட்டிலிருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக ஓடிவந்து தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்தவர்களை மீட்டனர்.
#KERALAM பாலா - தொடுபுழா சாலையில் ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துத் தகர்த்து முன்றிலில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், காரில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். https://t.co/MqCYHr0QW0
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 6, 2026