சென்னையில் சொந்த வீடு கட்டும் கனவு இனி நிஜமாகும்..! – ஏழை, எளிய மக்களுக்கு கிடைத்த சூப்பர் குட் நியூஸ்!
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் கனமழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வீடுகளை இழப்பதுடன், தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை வழங்கவும் தமிழகத்தில் குடிசை மாற்றுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில் சென்னையின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், பின்னர் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
குடிசைகளை அகற்றி வீடுகள் கட்டிக் கொடுப்பது மட்டுமின்றி, மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும் மேம்படுத்தும் நோக்கில், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றப்பட்டது.
அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அனைவருக்கும் பாதுகாப்பான வீடு என்ற நோக்கத்தில், இன்றுவரை இவ்வாரியத்தின் மூலம் பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும் நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் ரூ. 1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,
- அனாதைக்குப்பம் - 64 வீடுகள்,
- வியாசர்பாடி பழைய பிளாக் - 1,158 வீடுகள்,
- பட்டினப்பாக்கம் - 1,484 வீடுகள்,
- ருக்மணி நகர் - 111 வீடுகள்,
- முல்லை நகர் - 462 வீடுகள்,
- உதயசூரியன் நகர் - 850 வீடுகள்,
- பச்சைக்கல் வீராசாமி தெரு - 912 வீடுகள்,
- மேற்குக் கல்லறை சாலை - 792 வீடுகள்,
- கக்கன் காலனி - 324 வீடுகள்
என மொத்தம் 9 இடங்களில் 6,157 வீடுகள் கட்டப்பட உள்ளன.
இதற்கிடையே, பழுதடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதி, பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
"பழைய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய குடியிருப்புகளில் இருந்து வெளியேறி தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வேண்டிய மக்களுக்கு ஒரே முறை ரூ. 24 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
அதே போல், "அரசாணை வெளியிடப்பட்ட திட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விட்டதாகவும், நவம்பர் மாத இறுதிக்குள் பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகள் துவங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, 20 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி "ஏற்கனவே இருந்த அளவைவிட இரு மடங்காக அதிகரித்து புதிதாகக் கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் 420 சதுர அடி பரப்பளவில் ஒரு படுக்கையறை, கூடம், சமையலறை (1BHK) என்ற அமைப்பில் இருக்கும்" என்றும், "நிலத்தின் தன்மை மற்றும் இடத்தின் வசதியைப் பொறுத்து 3 மாடிகள் முதல் 9 மாடிகள் வரை குடியிருப்புகள் கட்டப்படும்" எனக் குறிப்பிட்டார்.
"5 மாடிகளுக்கு மேல் கட்டப்படும் குடியிருப்புகளில் லிப்ட் வசதி ஏற்படுத்தப்படும். லிப்ட் வசதி உள்ள வீடுகளுக்கு மாதம் ரூ.750 பராமரிப்புக் கட்டணமாகவும், லிப்ட் வசதி இல்லாத வீடுகளுக்கு மாதம் ரூ.250 பராமரிப்புக் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்" என்றும் தெரிவித்த அவர், "மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்குத் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.
யாருக்கு முன்னுரிமை?
பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அதே பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படும் போது, ஏற்கெனவே அங்கு வசித்து வந்த தகுதியான பயனாளிகளுக்கே முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படும். அவ்வாறு வீடு பெறும் பயனாளிகள் ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே வசிக்காத புதிய விண்ணப்பதாரர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கான கட்டணம் மாறுபடும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடுகளைப் பெற விரும்புவோர் சில முக்கியத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதுபற்றியும் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பற்றியும் மேலாண்மை இயக்குநர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- விண்ணப்பதாரர் சென்னையில் குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை வசித்திருக்க வேண்டும்.
- அரசு வேலையில் இருக்கக் கூடாது.
- வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவராக இருக்கக் கூடாது.
- GST பதிவு வைத்திருக்கக் கூடாது.
- விண்ணப்பதாரர் பெயரில் சொத்துகள் இருக்கக் கூடாது.
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- முழுமையான வீட்டு முகவரி.
- கணவன் மற்றும் மனைவியின் தனித்தனியான பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
- குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியல் (E-Print).
- குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள்.
- வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.
- வருமானச் சான்றிதழ் நகல்.
- சிறப்புச் சான்றிதழ் (மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்கள்)
எங்கெங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு கோரும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை, முதலமைச்சரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் சமர்ப்பிக்கலாம்.
ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வீடு கிடைக்குமா?
வீடு ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் அட்டை மூலம் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்படுவதாக மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு பெற்றவர்கள் மீண்டும் வீடு பெறுவதைத் தடுக்கும் வகையில் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படும் என்றும், ஒரே நபர் பலமுறை வீடுகளைப் பெற முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 21 இடங்களில் புதிய குடியிருப்புகள்
தற்போது சென்னையில் 9 இடங்களில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 21 இடங்களில் குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். மீதமுள்ள இடங்களிலும் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அரசாணைகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 13 ஆயிரம் வீடுகள் காலி
ஒருபுறம் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் கணிசமான எண்ணிக்கையிலான வீடுகள் காலியாக உள்ளன.
சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரம் வீடுகள் உள்ளதாகவும், அவற்றில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் தற்போது காலியாக இருப்பதாகவும் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வேலைவாய்ப்பு தேடி வந்து வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒருபுறம் இருக்க, பல ஆண்டுகளாகக் குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் ஏழை, எளிய மக்களும் உள்ளனர். மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் இம்மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாக உள்ளது.
அந்த வகையில், பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றி நவீன வசதிகளுடன் புதிய வீடுகளைக் கட்டுவது, தகுதியான மக்களுக்கு வீடுகளை ஒதுக்குவது, ஏற்கெனவே காலியாக உள்ள வீடுகளைப் பயன்படுத்துவது என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் முன் பல்வேறு பணிகள் உள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, உண்மையில் வீடு தேவைப்படும் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு அவை சென்றடையும் போது தான் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு முழுமையடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

