மலையை பார்த்து நாய் குரைப்பதால் மலைக்கு எந்த சேதாரமும் வந்துவிடாது - முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி..!

 
1

முதலமைச்சர் விஜய் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்,

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரை திமுகவினர் வளர்ச்சித் திட்டங்கள் இன்றி “கொத்து பரோட்டா” போலப் பிய்த்துப் போட்டு நாசமாக்கிவிட்டனர் எனக் காரசாரமாக விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்தத் தடித்த வார்த்தை பேச்சுக்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தற்பொழுது மிகக் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுத்துள்ளார்

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நாகரிகமற்ற பேச்சை மிகக் கடுமையாகக் கண்டித்தார். “முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகவும், சென்னை மேயராகவும், துணை முதல்வராகவும், முதல்வராகவும் இருந்து கொளத்தூர் தொகுதிக்குச் செய்துள்ள எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் உலகறிந்தது. ஆனால், வரலாறே தெரியாமல் கொளத்தூரை கொத்து பரோட்டா போட்டுவிட்டதாக முதலமைச்சர் விஜய் மிகக் கீழ்த்தரமான மொழியில் பேசி வருகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பேசும் வார்த்தைகள் இதுதானா?” என்று ஆர்.எஸ். பாரதி கொந்தளித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து தவெக அரசின் குதிரை பேர அரசியல் குறித்தும் ஆர்.எஸ். பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததே, முதலமைச்சர் விஜய் பின்னணியில் இருந்து நடத்திய குதிரை பேரத்திற்கான அப்பட்டமான சான்று என்றார். “கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டதாகக் கூறும் விஜய், தற்பொழுது கொளத்தூரில் இருந்து திமுகவின் ‘எச்சில் இலைகளை’ எல்லாம் தவெகவிற்குள் சேர்த்துக் கொண்டு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். மலையைப் பார்த்து நாய் குரைப்பதால் மலைக்கு எந்தச் சேதாரமும் வந்துவிடாது” என்று விஜய்யை மிகக் காரசாரமான வார்த்தைகளால் ஆர்.எஸ். பாரதி சாடினார்.

மேலும், கரூர் மாவட்டத்தில் முந்தைய திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் விஜய் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று மறுத்த ஆர்.எஸ். பாரதி, தவெக அரசின் இத்தகைய ஜனநாயக விரோதக் குதிரை பேர நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே திமுக சார்பில் ஆளுநரிடம் முறைப்படி வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தமிழக அரசுக்கு எதிராக திமுக சட்டப்படியும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து மிகத் தீவிரமாகப் போராடும் என்றும், விஜய்யின் இந்த வெற்று முழக்கங்கள் மற்றும் அவதூறுகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் ஆர்.எஸ். பாரதி தனது பேட்டியில் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.