நடுங்கவைக்கும் தர்மஸ்தலா வழக்கு! தோண்டதோண்ட கிடைக்கும் ஆதாரங்கள்..!
கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலா என்ற புகழ்பெற்ற இடம் உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் போலீசில் அளித்த புகார் சர்ச்சையை கிளப்பியது. ஏனென்றால் அந்த புகாரில் அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். கடந்த 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றியதாகவும், இந்த காலக்கட்டத்தில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். தற்போது கோவில் பணியில் இருந்து நின்றுவிட்டேன். வெளிமாநிலங்களில் வசிக்கும் நிலையில் மனம் உறுத்தியதால் புகார் அளித்தேன் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி பெண்கள், மாணவிகளின் உடல்களை தர்மஸ்தலா கோவில் அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றின் கரையோர வனப்பகுதியில் புதைத்தேன். புதைக்கப்பட்ட உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன என்று கூறியிருந்தார். இது சர்ச்சையானது. மேலும் இந்த பெண்கள், மாணவிகள் எப்படி இறந்தனர்? அவர்களின் உடல்கள் எதற்காக குறிப்பிட்ட இடத்தில் புதைக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாஜி தூய்மை பணியாளர் குறிப்பிட்டு சொன்ன 13 இடங்களில் உடல்களை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. உடல்களை தேடும் பணி கடந்த 29ம் தேதி தொடங்கியது. 3வது நாளான இன்று மாஜி தூய்மை பணியாளர் சொன்ன 6வது இடத்தில் சிதைந்த மனித எலும்பு கிடைத்தது. அது ஆணின் எலும்புகூடு என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்கள் மனித எச்சங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இன்று எலும்பு கிடைத்துள்ளது. இது இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்த தேடுதல் பணியின்போது மனித எச்சங்கள் தவிர்த்து பிற பொருட்கள் கிடைத்தன. அதன்படி முதல் நாளான நேற்று முன்தினம் நேத்ராவதி ஆற்றின் தடுப்பணை பகுதியில் பள்ளங்கள் தோண்டியபோது பார்ன் கார்டு, ரூபே டெபிட் கார்டு உள்ளிட்டவை கிடைத்தன. இதில் பார்ன் கார்டு ஆண் பெயரும், டெபிட் கார்டில் பெண் பெயரும் இருந்தது. அதன்பிறகு பெண்களின் மேலாடை கிடைத்தது. இருப்பினும் இது புதைக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களுக்கு சொந்தமானதா இல்லையா? என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதுபற்றி விரிவான விசாரணைக்கு பிறகு தான் தகவல் தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது உடல்களை தேடும் இடத்தில் சிறப்பு விசாரணை குழுவினர் எஸ்பி ஜிதேந்திர குமார், புத்தூர் உதவி கமிஷனர் ஸ்டெல்லா வர்க்கிஸ், தடயவியல் நிபுணர்கள் உள்ளனர். மேலும் மோப்பநாய்களும் சம்பவ இடத்தில் உள்ளன. சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை தடயவில் நிபுணர்கள் பரிசோதித்து வருகின்றனர். மேலும் நேத்ராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் செல்கிறது. இதனால் உடல்களை தேடும் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் சில இடங்களில் மோட்டார்கள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தர்மஸ்தலா விவகாரம் தொடர்பா ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் சிறப்பு விசாரணை குழுவினருக்கு தகவல் அளிக்கலாம். சிறப்பு விசரணை குழுவினரை பொதுமக்கள் 0824 – 2005301 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் வாட்ஸ்அப்பில் 8277986369 என்ற எண்ணில் தகவல்களை அளிக்கலாம். இ-மெயில் என்றால் sitdps@ksp.gov.in என்பதன் மூலம் தகவல்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


