பாலைவனம் இனி சோலைவனம்! - 60 கோடி மரங்களை நட்டு உலகை ஆச்சரியப்படுத்தும் சவுதி அரேபியா..!

 
1 1

சவுதி அரேபியாவின் 95 சதவீத நிலப்பகுதி மணல் நிறைந்த பாலைவனமாகவே அறியப்படுகிறது. ஆனால், ஒரு காலத்தில் பசுமை பூமியாக இருந்த இந்தப் பகுதியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் லட்சியத்துடன் சவுதி அரசு களமிறங்கியுள்ளது. இதற்காக 'சவுதி பசுமைத் திட்டம்' (Saudi Green Initiative) என்ற பெயரில் கடந்த 2021-ம் ஆண்டு அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மாபெரும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சுமார் 18 கோடி ஏக்கர் நிலத்தை பசுமையாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜூலை வரை 15 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன.

பாலைவனச் சூழலில் மரம் வளர்ப்பது என்பது சவாலான காரியம் என்பதால், இரண்டு ஆண்டு கால விரிவான ஆய்வுக்குப் பிறகு வறட்சியைத் தாங்கி வளரும் பூர்வீகத் தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பனை, அத்தி, மாதுளை போன்ற உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மரங்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 60 கோடி மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டுள்ள சவுதி அரசு, முதல் கட்டமாக இயற்கை முறையிலும், இரண்டாம் கட்டமாக 2030-க்குப் பிறகு நவீன தொழில்நுட்பங்கள் மூலமாகவும் காடுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மரங்கள் வளர்வதற்குத் தேவையான நீர் மேலாண்மைக்காக 400 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய முறைகளையும், நவீன நீர் சேகரிப்பு உத்திகளையும் அரசு கையாண்டு வருகிறது. நிலத்தில் அரை சந்திர வடிவ குழிகள் மற்றும் படிக்கட்டு போன்ற தடுப்பணைகளை உருவாக்கி மழைநீரைத் தேக்கி வைப்பதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர, நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து செடிகளுக்குப் பாய்ச்சும் முறையும், வறண்ட பகுதிகளில் சொட்டுநீர் பாசன முறையும் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்காக நாடு முழுவதும் நிலம், நீர் மற்றும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப 1,150 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சாலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் தேசியப் பூங்காக்களில் மரம் வளர்க்கப்படுகிறது. வரும் 2030-க்குள் 60 கோடி மரங்கள் என்ற இடைக்கால இலக்கையும், இறுதியில் 1,000 கோடி மரங்கள் என்ற பிரம்மாண்ட இலக்கையும் எட்டும் முனைப்பில் சவுதி உள்ளது. இந்தத் திட்டம் முழுமையடையும் போது, சவுதி அரேபியா ஒரு பாலைவன நாடாக இல்லாமல், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பசுமை தீபகற்பமாக உலக வரைபடத்தில் உருவெடுக்கும்.