"ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது" - அன்புமணி வரவேற்பு

 
anbumani

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது ; நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்!!

jallikattu

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம்  தடை விதித்ததை தொடர்ந்து அப் போட்டிகளுக்கு அனுமதி அளித்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் ; தமிழ்நாடு அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று நீதியரசர் கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு பல்வேறு வகைகளில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

 ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் வீர விளையாட்டு என்பதைக் கடந்து தமிழ்நாட்டு உள்ளூர் இன காளைகளின் நலனையும், மரபு வழியையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது என்ற தமிழ்நாட்டு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டுச் சிறப்பு என்பது நூற்றாண்டுகளைக் கடந்தது என்ற நிலையில் அது குறித்து ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் சரியான அமைப்பு இல்லை என்றும் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டு சிறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது.உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் வரலாற்று சிறப்புமிக்க இன்னொரு அம்சம் ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்ற பொதுப் பட்டியலில் உள்ள பொருட்கள் குறித்து சட்டம் இயற்றுவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் அதிகாரம் உண்டு என்பதாகும். இதன் மூலம் மத்திய பட்டியலில் உள்ள பொருட்கள் தவிர்த்து மீதம் உள்ள அனைத்து பொருட்கள் குறித்தும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எவ்வாறு  அதிகாரம் உண்டோ அதேபோல் நீட் விலக்கு குறித்து சட்டம் இயற்றவும் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு. ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் தொடர்புடையது என்ற அடிப்படையில் தான் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல் நுழைவுத் தேர்வுகளிலிருந்து தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் தொழில் படிப்பு கல்வி நிறுவனங்களுக்கு காலம்காலமாக விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதைப் பாதுகாக்கும் நோக்குடன் தான் நீட் விலக்கு சட்டம் இயற்றப்பட்டது என்பதால் அதற்கு குடியரசு தலைவர் வழியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.