சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் கடும் எதிர்ப்பு
அரசின் மீதும் முதல்வர் மீதும் நேரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் எப்படி அவதூறு இல்லை என கூற முடியும்? என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த அதிமுக போராட்டங்களில் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது.
இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். அப்போது நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தான் அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளதாக சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசையும் முதல்வரையும் வாய்க்குவந்தபடி விமர்சித்த சி.வி.சண்முகம் தற்போது அவதூறு கருத்து இல்லை என குறிப்பிட முடியும்,அரசின் மீதும் முதல்வர் மீதும் நேரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் எப்படி அவதூறு இல்லை என கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நான்கு வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.