திட்டமிட்டபடி 14 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் : ராதாகிருஷ்ணன் பேட்டி!!

 
ttn


வானிலை இயல்பான நிலைமையில் இருந்தால் திட்டமிட்டபடி 14 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

வடகிழக்குப் பருவமழை காலம் என்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களை காக்கும் வகையில் 200 வார்டுகளிலும் மருந்து, மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மழைக்கால நோய்களை தடுக்க சிறப்பு முகாமை முதற்கட்டமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

ttn

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னையில் இன்று 200 இலவச மருத்துவ முகாம்கள் அரசு சார்பாகவும், 200 முகாம்கள் தனியார் சார்பாகவும் நடைபெறுகிறன.மழை நீர் வடிந்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 21,936 ஊழியர்கள் டெங்கு தடுப்பு  நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். டெங்கு தடுப்பு மருந்துகள் உட்பட ரூ.167கோடி மதிப்பிலான அனைத்து வைகை நோய்களுக்கான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. வானிலை இயல்பான நிலைமையில் இருந்தால் திட்டமிட்டபடி 14 தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்" என்றார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர், சிறப்பு மருத்துவ முகாம் இன்று சென்னை முழுவதும் நடத்தப்படுகின்றன. வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலமாக மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படும். பொதுமக்கள் அருகில் இருக்கும் முகாம்களுக்கு வருகை தந்து உரிய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.