`சீமானுக்கு எதிரான வன்கொடுமை புகார் தீவிரமானது; திரும்பப்பெற முடியாது'- ஐகோர்ட்

 
விஜயலட்சுமி

மிரட்டலின் அடிப்படையில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெற்றது தெளிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனது குறிப்பிட்டுள்ளது.

பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! – சீமான் வேண்டுகோள்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும்,  விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி  ஜி.கே.இளந்திரையன்  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர்   ஜான்சத்தியன் ஆஜராகி, தூண்டுதலின் பேரில்தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாகும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன்,இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும் ஏற்கனவே இது குறித்து நடிகை விஜயலட்சுமி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும்  காவல்துறையிடம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி நடிகை விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு மதுரை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாகவும், பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு  வைத்துள்ளார், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் வாதிட்டார்.

Highcourt

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? என்றும் கேள்வி எழுப்பினார்.  வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தார் கூறினாலும் காவல்துறை பாலியல்வன்கொடுமை  வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது  எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து விரிவான தீர்ப்பையும் வழங்கி உள்ளார்.அந்த தீர்ப்பில், வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான்  உறவு வைத்துள்ளார்,பின்னர் திருமணம் செய்ய தவறியதால் ,நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு காரணங்களால் முதல் புகார் குறித்து காவல்துறை விசாரித்து முடிக்க முடியவில்லை என்றும், விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக சீமான் தெரிவித்ததன் அடிப்பைடையில்  முதல் புகார் திரும்ப பெறப்பட்டதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பின்னர் கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது புகார் அளிக்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, திருவள்ளுர் மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்..

சீமான் மீது  நடிகை விஜயலட்சுமி பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் புகார்!

அதற்கு முன்பே சீமான் வற்புறுத்தலினால் ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும் விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகை சீமான் பெற்றுள்ளதாகதாகவும் விஜயலட்சுமி மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்றும், மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான  இரண்டாவது புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது என்றும், பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது,ஜாமீனில் வெளிவர குற்றம் , புகார்தாரர் விசாரிக்க விரும்பவில்லை என்றாலும், அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்றும் எனவே சீமான் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.