சூடு, சுரணை இல்லாத முதல்வர்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சீரழியும் இளைஞர் சமூகம்: "தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் திருத்தணியில் நடந்த விவகாரமே இதற்குச் சாட்சி; போதையில் இருக்கும் இளைஞர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. போதை நடமாட்டத்தை அரசு கட்டுப்படுத்தத் தவறியதால், ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் சீரழியும் நிலையில் இந்த ஆட்சி நடைபெறுகிறது. இப்படியொரு சீர்கெட்ட ஆட்சி நமக்குத் தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.
டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏன்?: தொடர்ந்து பேசிய அவர், தமிழகக் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய டிஜிபி பதவிக்கு இதுவரை நிரந்தர அதிகாரியை நியமிக்கவில்லை. திறமையான அதிகாரிகளை நியமித்தால் அவர்கள் சுயமாக நடவடிக்கை எடுப்பார்கள், அது ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் அஞ்சுகிறார். அதனால்தான் தகுதியானவர்கள் பட்டியலில் இருந்தும் யாரையும் நியமிக்காமல் காலம் கடத்துகிறார். நாட்டு மக்கள் குறித்துக் கவலைப்படாத, மானம், வெட்கம் இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர், இனிமேல் ஆவது டிஜிபியை நியமிக்க வேண்டும். திமுக என்றால் அது கட்சியல்ல.. கார்ப்பரேட் கம்பெனி, கட்சி என்றால் அது அதிமுக தான். சேலம் மாவட்டம் என்றால் அதிமுகவின் கோட்டை. இங்கு ஒன்றும் செய்ய முடியாது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்வதற்கு மக்களின் கூட்டமே சாட்சி. தனிப்பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை. இந்த முறை 11 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெரும். இது அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும்.
அதிமுக ஆட்சியில் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்து சேலம் மாவட்டத்தில் ஏதாவது திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்களா? குடும்பம் தான் திமுக கட்சி. இந்த நிலையை வரும் தேர்தலில் மாற்ற வேண்டும். நிதி இல்லை என்று ஸ்டாலின் கூப்பாடு போடுகிறார். கார் பந்தயம் நடத்துவதற்கு நிதி இருக்கிறதா? யாராவது கேட்டார்களா? சென்னையில் கார் பந்தயம் நடத்தி செலவிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் எழுதாத பேனாவை நடுக்கடலில் வைப்பதற்கு ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்கிறார்கள். எழுதும் பேனாவை மாணவர்களுக்கு கொடுங்கள். ஊதாரித்தனமாக முதலமைச்சர் செலவு செய்து வருகிறார். ஊதாரிச் செலவை திமுக செய்து வருகிறது.
திமுக மீது இருக்கும் குற்றங்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கூட்டணி வலுவாக இல்லை என்று விமர்சிக்கிறார்கள். அதிமுக கூட்டணி எப்படி அமையும் என்று பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி பழனிசாமி கிராமத்தில் இருந்து வந்தவர் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டு இருக்கிறார். பெரும்பான்மையான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
கடந்த தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக பச்சைப் பொய்யை திமுகவினர் சொல்லி வருகிறார்கள். எதையாவது நிறைவேற்றினார்களா என்று மேடையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக மீது எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார்.


