சென்னையில் இந்த வாரம் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்

மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், நடப்பாண்டில் பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வானிலை அறிக்கையை துல்லியமாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையை நம்பியே தமிழ்நாடு உள்ளது. அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை காலத்தில் பாதிப்பு இல்லை. பேரிடர் காலங்களில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க செய்து விட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும்.மழைநீர் வடிக்கால் தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மாநில சாலைகளை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் தொடர்பாக இந்த வாரம் ஆய்வு நடத்த உள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதோடு சிறு விபத்துக்கள் ஏற்படுவதாக செய்திகள் வந்துள்ளது. இது ஏற்புடையது அல்ல; அமைச்சர்கள் , அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். நானும் கள ஆய்வு மேற்கொள்வேன். சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.