ஜூலை 1 முதல் வரப்போகும் அதிரடி மாற்றம்! தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் 'செக்'!
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் அதிகாரிகள், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்ற கருத்து இருக்கின்றது. இருந்தாலும், குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் எட்டாக்கனியா இருப்பவருக்கும் கல்வியைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் கடந்து வந்த பாதை கரடுமுரடாக இருந்திருக்கலாம். நகைகளை அடமானம் வைத்தும், மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல; புண்ணிய கணக்கு.
எத்தனையோ தனியார் பள்ளி நிர்வாகிகள் என்னிடம் புலம்பி இருக்கிறார்கள். காசு கேட்டார்கள் என்று சொன்னார்கள். அதனை நாம் மாற்றுவோம் எனக் கூறினேன். இனிமேல் ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம். எந்த கட்சி கேட்டாலும் தராதீர்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தெரியும் என்று கூறிக் கொண்டு யார் வந்தாலும்கூட அவரை அருகிலே அனுமதிக்காதீர்கள்; வெளியே செல்லுங்கள் என கூறுங்கள். ஜூலை 1- ஆம் தேதி முதல் இணைய வழியாக மட்டுமே தனியார் பள்ளிகள் அனுமதிகள் பெற வழிவகை செய்யப்படும்.
ஒரு சகோதரனாகக் கேட்கிறேன், தனியார் பள்ளிகள் முடிந்த வரை தங்களுடைய கட்டணத்தைக் குறையுங்கள். ஏழைப் பிள்ளைகளும் உங்கள் பள்ளிகளில் படிக்க வருகின்றனர். முடிந்த வரையில் கட்டணத்தைக் குறையுங்கள். பள்ளிக் கட்டணத்தை உங்களுடைய அறிவிப்பு பலகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். இதன்மூலம் உங்கள் பள்ளிகளைத் தேடி மாணவர்கள் அதிக அளவில் வருவார்கள். தனியார் பள்ளிகளில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்களிடமும், பணியாளர்களிடமும் மிகவும் மரியாதையாக பேசுங்கள். பெற்றோரிடமும், மாணவர்களிடமும் கனிவாகப் பேசுங்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களுக்கு உங்களுடைய தனியார் பள்ளிகளில் வாய்ப்பு கொடுங்கள். அப்பொழுது அவர்களும் சந்தோஷத்துடன் தன் குழந்தையைப் படிக்க வைப்பார்கள். மாணவர்களிடம் பாசிட்டிவ் அப்ரோச் கொண்டு வாருங்கள். இனி எந்த அரசியல்வாதிக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் தொடர் அங்கீகாரம் , தடையின்மை சான்று பெறலாம். தமிழ்நாடு கல்வியினால் தான் மாறப்போகிறது. அனைத்து பாடத்திட்டங்களையும் மேம்படுத்தப்படவுள்ளன. 1- ஆம் வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள் அமலுக்கு வந்துள்ளது. அடுத்தாண்டு 4- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள் அமலுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.

