ஜூலை 17ல் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு துவக்கம்; டிஜிட்டல் முறையில் பதிவு செய்வது எப்படி?
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் முறையாக சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. இவை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது.
முதற்கட்ட பணியாக, பொதுமக்கள் தங்களது விபரங்களை https://se.census.gov.in/ என்ற இணையதள முகவரியில் மொபைல்போன் மூலம் பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு, 2026 ஜூலை 17 முதல் 31 வரை நடைபெற உள்ளது.ஒரு குடும்பத்திற்கு ஒரேயொரு மொபைல் எண் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மொத்தம், 34 கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னர், 12 இலக்க அடையாள எண் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பின்னர், தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர் வீடுகளுக்கு வரும்போது, அந்த 12 இலக்க அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும்.
குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் இருக்கும் யாரேனும், வீடு மற்றும் வசதிகள் குறித்து பதிவு செய்யலாம். குடும்ப தலைவர் அல்லது தலைவி சார்பாக தான் பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வேறு குடும்பத்தினர் பயன்படுத்த முடியாது.குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் பெயரை மாற்ற முடியாது.மாநிலம், யூனியன் பிரதேசத்தில் கணக்கெடுப்பு துவங்குவதற்கு 15 நாளுக்கு முன்னர் இந்த இணையதளம் திறந்துவிடும். விருப்பப்படுபவர்கள் தங்களதுவிவரங்களை பதிவு செய்யலாம்.https://se.census.gov.in/ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். முதலில் மாநிலம், யூனியன் பிரதேசத்தை தேர்வு செய்து, கேப்சாவை குறிப்பிட வேண்டும்.இதற்கு அடுத்து வரும் அறிவிப்பில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.அடுத்து குடும்ப தலைவர் அல்லது தலைவியின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அடுத்து விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும்.பிறகு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் பதிவு செய்யப்பட்ட உறுதி செய்யப்படும்.பிறகு மாவட்டம், முக்கிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.பிறகு வரும் மேப் பகுதியில் நமது வீடு இருக்கும் பகுதியை தேர்வு செய்து சேமிக்க வேண்டும்அடுத்து கேள்வித்தாள் பக்கம் வரும்.பெரும்பாலான கேள்விகள், விருப்பங்களை தேர்வு செய்யும் முறையில் அமைந்துள்ளது. பதில்களை பதிவு செய்ய விர்ச்சுவல் கீ போர்டு வசதியும் உள்ளது.சந்தேகங்களை தீர்க்க தேவையான FAQ மற்றும் தீர்வுகள் அளிக்கும் வசதியும் இணையதள பக்கத்தில் உள்ளன.ஏதாவது கேள்வி, தகவல் விடுபட்டு இருந்தால் இணையதளமே நினைவுபடுத்தும். அனைத்து விவரங்களையும் செக் செய்து கொள்வதுடன், மாற்றிக் கொள்ள முடியும்.இதனை பதிவு செய்ததுடன், 11 இலக்கு ஐடி தோன்றும். பிறகு, மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும் வரும்.

