நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக மோதிய கார்.. 4 இளைஞர்கள் பலி..
கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே பழுதாகி நின்ற லாரி பின்புறம், அதிவேகமாக வந்த கார் மோதியதில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அடுத்த செம்மஞ்சேரி மீனவ பகுதியில் சென்னையை நோக்கிவந்த ஈச்சர் லோடு லாரி செண்டர் சாப்ட் கட்டாகி பழுதான நிலையில் நின்றுள்ளது. அதே மார்கத்தில் அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் லாரியின் பின்பக்கதின் கீழ் சிக்கி கொண்டதில் காரில் இருந்து 4 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பாளர்கள் கிரேன் உதவியுடன் லாரியை தூக்கி காரை வெளியே எடுத்தனர். பின்னர் காரில் இருந்த இளைஞர்களின் உடல்களை மீட்டனர். மேலும் விபத்துக்கு நடந்த இடம் மிகவும் வளைவான பகுதியாக என்பதாலும், பழுதான லோடு லாரி எந்த எச்சரிக்கை அறிவிப்பும் இன்றி சாலையில் நின்றதாலும் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அதிகாலை நேரத்தில் காரும் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காரில் இருந்த இளைஞர்கள் யார், எங்கு சென்று வந்தனர், மதுபோதையில் இருந்தனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.