போலீசாரின் செல்போனை தூக்கி கண்ணாமூச்சி ஆட்டம்! சாராய வியாபாரிகளுக்கு ஷாக்

 
போலீஸ்

நாகை அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர்களை பிடிக்கச் சென்ற போலீசாரின் செல்போனை  திருடிவைத்துக் கொண்ட சாராய வியாபாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் போலீசார் பிரகாஷ் மற்றும் மாஸ்கோ இருவரும் சாராய வியாபாரிகளை பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ராமாபரம் பகுதியில் நின்றுக் கொண்டிருந்த சாராய வியாபாரிகள் சரவணன், மற்றும் தங்கம் என்கிற வினோத் ஆகிய இருவரும் போலீசாரை கண்டு வயல் பகுதிகளில் இறங்கி ஓட்டம்பிடித்தனர். 

இதனை கண்ட போலீசார், தங்களின் இரு சக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற சாராய வியாபாரிகளை துரத்திச் சென்றனர். அப்போது அங்குவந்த சாராய வியாபாரிகளின் உறவினர்கள் இருச்சக்கரவாகனத்தில் இருந்த காவலர் பிரகாஷ் என்பவரின் இரண்டு செல்போன்களை திருடி  வாய்க்கால் புதருக்குள் ஒழித்து வைத்துள்ளனர். தப்பிச் சென்ற சாராய வியாபரிகளை பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் சொல்வதற்காக செல்போனை தேடியபோது செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

ஆனால் உறவினர்கள் செல்போனை திருடியதை சொல்லாமல் போலீசாரை சுமார் ஒரு மணி நேரம் அலைய விட்டுள்ளனர். இது குறித்து காவல் ஆய்வாளர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரண்டு உதவி ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் விசாரித்தும்  செல்போனை கொடுக்காமல் அலைய விட்டதால் ஆத்திரமடைந்த அவர் எல்லோர் மீதும் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதை தொடர்ந்து திருடி ஒழித்து வைத்திருந்த இரண்டு செல்போன்களையும் எடுத்துக் கொடுத்தனர். அதன் பிறகு கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.