அண்ணாமலையின் முயற்சியால் 3 மாதங்களுக்கு பின் ஜமைக்கா நாட்டிலிருந்து வந்த இளைஞர் உடல்

ஜமைக்கா நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வாலிபர் மூன்று மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது. நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மேயர் உள்ளிட்டோர் வாலிபரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணி செய்தபோது கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி அங்கு கொள்ளையர்களால் நடந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து விக்னேஷ் உயிரிழந்தார். இந்நிலையில் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அவர் குடும்பத்தினர் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்த சூழலில் உடலை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பல்வேறு முயற்சிகளை எடுத்த நிலையில் தமிழக முதலமைச்சரை சந்தித்தும் உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் வாலிபர் உடல் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் ஜமைக்காவிலிருந்து நியூ யார்க் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கத்தார் சர்வீஸ் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை சந்திப்பில் உள்ள விக்னேஷ் இல்த்திற்கு உடல் கொண்டுவரப்பட்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின்னர் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.