ரூ.113 தான் பேலன்ஸ்.. திடீரென அக்கவுண்ட்டில் விழுந்த ரூ.294 கோடி! மிரண்டு போன பிளம்பர்!
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென கோடீஸ்வரர் ஆனார். முதலில் அவரால் அதை நம்ப முடியவில்லை, ஆனால் தனது வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கச் சென்றபோது, அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இந்த விஷயம் முழுவதையும் வங்கிக்குத் தெரிவித்தார். இதற்கிடையில், இந்தச் செய்தி பரவியதும், உள்ளூர் மக்கள் அவரது வீட்டில் கூடத் தொடங்கினர். வங்கியும் காவல்துறையும் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.
பீஹாரின் கயா ஜி மாவட்டத்தில் உள்ள புத்தகயா அருகேயுள்ள கிராமம் மஸ்துபுரா. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விகாஷ் குமார். குழாய் பழுது பார்க்கும் பிளம்பர் தொழிலாளியாக உள்ளார். மாதம் 12,000 ரூபாய் சம்பாதிக்கும் இவரது வங்கி கணக்கில் வெறும் 113 ரூபாய் மட்டும் இருப்பு இருந்தது. திடீரென இவரது வங்கி கணக்கில் 94 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. பின்னர் மாலையில் மேலும் அதிகரித்து இருப்புதொகை 294 கோடி ரூபாயாக உயர்ந்தது.
வங்கி தவறால் இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டதா, தொழில்நுட்ப கோளாறா அல்லது ஏதேனும் மோசடி கும்பலின் வேலையா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்காக அந்த வங்கி கணக்குடன் தொடர்பில் உள்ள மற்ற வங்கி கணக்குகள், பணப்பரிமாற்ற அடையாள எண்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.

