DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்..!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் DC படத்துக்கு A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்.
'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கூலி' திரைப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'டிசி' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி 'சந்திரா' கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 'டிசி' திரைப்படம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 'ராகா ஆப் ரிவெஞ்' மற்றும் 'ஹேங்க் ஓவா' பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழலில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) 'டிசி' திரைப்படத்திற்கு 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது.

