கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது : தேமுதிக

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக - தேமுதிக கூட்டணி குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணி உறுதியான நிலையில் அதிமுகவை பொருத்தவரையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி இன்று உறுதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளிவருகிறது. தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.